தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் ஜூலை 16 (புதன்) அன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், மதுரை, கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை பதிவானதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை (வியாழன்) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றாலும், சற்று உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம்.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், அதனை ஒட்டிய தென்காசி பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.