இந்தியாவின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் சேவையை ஹரியானா மாநிலம் ஜிந்தில் ஜூலை 17ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி மற்றும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும், கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் ரூ.118 கோடி செலவில் இந்த அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த ரயில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஜிந்த்–லலித் கேரா இடையே சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
மேலும் உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) சிறப்புக் குழுவின் மேற்பார்வையில், ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் 10 பெட்டிகளுடன் மணிக்கு 120 கி.மீ. வேகம் வரை வெற்றிகரமாக சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரயில் டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்துகிறது. இதனால் கரியமில வாயு போன்ற நச்சுப் புகைக்கு பதிலாக துாய்மையான நீராவி மட்டுமே வெளியேறும் என்றும், வழக்கமான ரயில்களை விட சத்தம் மற்றும் அதிர்வுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





