போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமைப்புசார்ந்த போதைப்பொருள் விற்பனை வலையமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஜூலை 15 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கேரளத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் சதீசன் தலைமையிலான காங்கிரஸ் அரசு, போதைப்பொருள் கலாசாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக “ஆப்பரேஷன் துபான்” என்ற பெயரில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நடவடிக்கையின் முன்னேற்றத்தை முதல்வரிடம் எடுத்துரைத்ததாக கூறினார்.
கடந்த 43 நாட்களில் கேரளத்தில் 6,000-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய சொத்துக்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக “போர்” தொடுக்கும் வகையில் ஒரு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அம்சங்களை முதல்வர் விஜயுடன் விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் கூறியதாகவும், இனி தமிழக–கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து முறைகேடாக மது வகைகள் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, அண்டை மாநில எல்லைகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளுமாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.





