‘நமோ’ செயலி மூலம் வசூலிக்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ விசாரணை கோரிய புகார் முடித்து வைக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த பி.ஆர். அரவிந்தாக் ஷன் தாக்கல் செய்த மனுவில், 2021 டிசம்பர் 25 அன்று ‘நமோ’ செயலி வழியாக நன்கொடை வசூல் பிரசாரம் தொடங்கப்பட்டதாகவும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் பெயரில் நிதி கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், “சிறு நன்கொடை” திட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி மற்றும் அப்போது பா.ஜ. தலைவராக இருந்த ஜே.பி. நட்டா பொதுமக்களிடம் நன்கொடை வழங்க வேண்டுகோள் வைத்ததால் தானும் நன்கொடை வழங்கியதாக மனுதாரர் தெரிவித்தார். ஆனால், அந்த நன்கொடைகள் உண்மையில் அரசு திட்டங்களுக்கான எந்த அரசு கணக்கில் சென்றனவா என்பது குறித்து நன்கொடையாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, புகாரை ஆய்வு செய்ததில் அது சிபிஐ விசாரணை வரம்புக்குள் வராது என கண்டறியப்பட்டதால் பிப்ரவரி மாதமே புகார் முடித்து வைக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.