தவெக ஆட்சியில் “கமிஷன் கலாசாரம்” மற்றும் பர்சன்டேஜ் அடிப்படையிலான பேரங்கள் அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாக்கப் மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்த ஆட்சியில் இத்தகைய வழக்குகள் மூடி மறைக்கப்பட்டதாகவும், நாகர்கோவில் சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடப்பதாகவும், ரூ.50 கோடி வரை விலை பேசப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக, அதிமுக, பாஜ இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன என்றும் கூறினார்.

நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுகையில், திருவான்மியூர்–உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடரும் என்றும் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடந்த பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இனி பத்திரப்பதிவு துறையில் ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.