பெண்ணின் மேலாடையை கழற்றி மார்பகத்தை தொடுவது மட்டும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ‘பாலியல் பலாத்கார முயற்சி’ எனக் கருத முடியாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு பீஹாரின் பங்கா மாவட்டத்தில் 2008ல் நடந்த சம்பவத்தைச் சார்ந்தது. புகைப்படம் எடுக்க தந்தையுடன் ஸ்டூடியோவுக்கு சென்ற இளம்பெண்ணிடம், புகைப்படத்தை கணினியில் காட்டுவதாக கூறி தந்தையை வெளியே அனுப்பிய ஸ்டூடியோ உரிமையாளர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

வழக்கில் உள்ள விவரங்களின்படி, குற்றச்சாட்டுக்குள்ளானவர் பெண்ணின் மேலாடையை கழற்றி, மார்பை பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து வெளியே இருந்த தந்தை கதவை உடைத்து உள்ளே வந்ததால், மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட நீதிமன்றம் ஸ்டூடியோ உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி பூர்ணேந்து சிங், பலாத்காரம் செய்யும் நோக்கத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வெளிப்படையான செயல் அல்லது உடலுறவு முயற்சிக்கான ஆதாரம் வழக்கில் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அதே நேரம், பெண்ணை அறைக்குள் அடைத்து சல்வாரை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம் என்றாலும், இது ‘பலாத்கார முயற்சி’ அல்ல என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சட்ட வல்லுநர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.