புதுடில்லி: சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வு விடைத்தாள்களை கணினி வழியாக திருத்தும் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (டிஜிட்டல் மதிப்பீடு) முறையால் மாணவர்கள் விரக்தியடைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்தது.
டிஜிட்டல் மதிப்பீட்டுக்கான தனி விதிமுறைகள் வகுக்கவும், அதை கண்காணிக்க உயர்மட்ட குழு அமைக்கவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், இளம் மாணவர்கள் எந்த அளவுக்கு மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் உள்ளனர் என்பதை கவனிக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் அமைப்பு ரீதியான குறைபாடுகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பல தனிப்பட்ட மதிப்பெண் முரண்பாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில், அமைப்பு ரீதியான குறைகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா சவுஹான் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கப்பட்டு தற்போதைய மதிப்பீட்டு முறையை ஆய்வு செய்து சீர்திருத்தங்களை பரிந்துரைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ. மேற்கொண்டு வரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.





