ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளைத் தொடங்க மாநில அரசு நிலம் ஒதுக்கினால் போதுமானது; கட்டமைப்பு செலவுகளை மத்திய அரசு ஏற்கும் நிலையில், தமிழகம் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று சுப்ரீம்கோர்ட் ஜூலை 16 அன்று கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரம் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவே இந்த வழக்கு.
விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் 12 வார அவகாசம் வழங்குமாறு தமிழக அரசு கோரியது. ஆனால் அமர்வு அந்த கோரிக்கையை நிராகரித்து, 3 வாரத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டது.
மேலும், 9ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது குறித்து நீதிபதி நாகரத்னா கவலை தெரிவித்தார். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டம் ஆகிய அனைத்திலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டு என்பதால், 8ம் வகுப்பு முடிந்தவுடனே மாணவர்களுக்கு அழுத்தம் தொடங்கிவிடுகிறது என்றும் குறிப்பிட்டார். புதிய மொழியை அறிமுகப்படுத்த வேண்டுமெனில் 6ம் வகுப்பிலேயே தொடங்கலாம்; 9ம் வகுப்பில் மூன்றாவது மொழி கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 11க்குள் அரசிடமிருந்து உரிய விளக்கத்தை அளிக்க அமர்வு உத்தரவிட்டது.





