சென்னை: தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வடாம் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
கடைகள், சந்தைகள் மற்றும் பொருட்காட்சிகளில் குழந்தைகளை கவரும் வகையில் விற்கப்படும் வடாம் மற்றும் கலர் அப்பளங்களில் ஆபத்தான ரசாயன நிறமூட்டிகள் கலந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மக்கள் குழந்தைகளுக்கு கலர் அப்பளங்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக உளுந்து மற்றும் அரிசியை கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தரமான அப்பளங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
இவ்வகை வடாம்/கலர் அப்பளங்களை குழந்தைகள் சாப்பிட்டால் அலர்ஜி, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்; கவன சிதறலும் உருவாகலாம் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.





