தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெப்ப அலை நிலவும் என்பதால், ‘ஆரஞ்சு அலர்ட்’ நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில், கடலோர பகுதிகள் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிகபட்சமாக 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் சார்ந்த அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும். இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கும், நாளை மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒடிஷா–மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.





