தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக அளிக்க, தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவசர சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, புகார் அளிக்கும் வழிகளை அரசு அலுவலகங்களில் பரவலாக விளம்பரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமைச் செயலர் சாய்குமார் அனுப்பிய சுற்றறிக்கையில், லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களது இணையதளங்களில் தொடர்புடைய தொலைபேசி விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும் இடங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பற்றிய தகவல்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதானமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் (DVAC) தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகைகளில் “லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்” என்ற வாசகத்துடன், புகார் அனுப்ப வேண்டிய முகவரியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கம், எண் 293, எம்.கே.என்.தெரு, ஆலந்தூர், சென்னை 600 016 என்பதும் இடம்பெற வேண்டும். மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும், 044-22321090, 22321085, 22310989, 22342142 என்ற தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறைச் செயலர்கள் உறுதி செய்ய வேண்டும். மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.