தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை (டிவிஏசி) இயக்குநர் அலுவலகத்தில் நேற்று காலை ஆஜராகி, சுமார் ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

கரூரில் சாலை அமைக்கப்படாத நிலையில், ஒரு நிறுவனத்திற்கு ரூ.3.23 கோடி விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது டிவிஏசி வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதனை ஏற்று அவர் அலுவலகத்தில் முன்னிலையாகி விசாரணையை எதிர்கொண்டார்.

விசாரணை முடிந்த பின், அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டதாகவும், தன் மனதில் பட்டதை உண்மையுடன் தெரிவித்ததாகவும் வேலு கூறினார். தன் பதில்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், அது வழக்கமான நடைமுறை எனவும் தெரிவித்தார்.

மேலும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறிய அவர், தன்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்றும், விசாரணைக்கு அஞ்ச வேண்டிய காரணமில்லை என்றும் தெரிவித்தார்.