சென்னை: அண்ணாமலை தலைமையிலான ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு, கல்வி நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இவ்வகை இடங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்ததை நினைவூட்டியுள்ளது.

ஆனால், சென்னையில் மேற்கொண்ட கள ஆய்வில் 500 மீட்டருக்குள் பல கடைகள் இன்னும் இயங்குவது உறுதியாகியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

தலைநகரிலேயே இப்படியான நிலை இருப்பதால், பிற மாவட்டங்களிலும் இதேபோன்ற நிலை இருக்கக்கூடும் எனக் கூறிய அமைப்பு, தங்களது பகுதியில் 500 மீட்டருக்குள் இயங்கும் கடைகள் குறித்து செல்பி வீடியோ பதிவு செய்யுமாறு கேட்டுள்ளது.

மதுக்கடை மற்றும் அருகிலுள்ள கல்வி நிறுவனம்/கோவில்/பேருந்து நிலையம் ஆகியவற்றை காட்டும் வகையில் வீடியோ எடுத்து, இரண்டிற்கும் இடையிலான தூரம் உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிடி, ரீலாக பதிவு செய்து கூகுள் விண்ணப்பப் படிவம் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது.