நாட்டின் கொள்கை முடிவுகள் மற்றும் எதிர்கால திட்டமிடுதலுக்கு ஆதாரமாக இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அதன் முன்னோட்டமாக, குடும்பங்கள் தங்களே விவரங்களை பதிவு செய்யும் ‘சுய விவர பதிவு’ வசதி ஜூலை 17 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. 2011க்குப் பிறகு 2021ல் நடத்தப்பட வேண்டிய கணக்கெடுப்பு, கோவிட் தொற்று காரணமாக நடைபெறவில்லை. தற்போது அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
திட்டமிட்டபடி கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. கணக்கெடுப்பாளர் வீடு வீடாக வந்து கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 1ல் தொடங்கும் நிலையில், அதற்கு 15 நாட்கள் முன்பாகவே https://se.census.gov.in/ என்ற இணையதளத்தில் சுய பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் அனைத்து விவரங்களையும் ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். குடும்பத் தலைவர் அல்லது குடும்பத் தலைவி யாரேனும் ஒருவர் வீடு மற்றும் வீட்டில் உள்ள வசதிகள் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம். குடும்பத் தலைவரின் பெயரை மாற்ற முடியாது; மேலும் ஒரு குடும்பம் பயன்படுத்திய மொபைல் எண்ணை மற்றொரு குடும்பம் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம்/யூனியன் பிரதேசத்தைத் தேர்வு செய்து ஓடிபி சரிபார்ப்புக்குப் பிறகு மாவட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வரைபடத்தில் வீட்டின் இடத்தை குறித்துச் சேமித்து, மொத்தம் 33 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்; பெரும்பாலானவை விருப்பத் தேர்வாக இருக்கும். பதிவுகளை ‘டிராப்ட்’ ஆக சேமித்து, சரிபார்த்து திருத்திய பிறகு ‘சப்மிட்’ செய்தால் ‘H’ என்ற எழுத்தில் தொடங்கும் 11 இலக்க அடையாள எண் உருவாகி எஸ்.எம்.எஸ். மூலமும் வரும்; கணக்கெடுப்பாளர் வரும்போது அந்த எண்ணை தெரிவிக்கலாம்.





