ஜூலை 17 அன்று ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஜிந்தில் கொடியசைத்து தொடங்கினார். இதன் மூலம் நாட்டில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
நிலக்கரி மற்றும் டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் ரூ.118 கோடி செலவில் உள்நாட்டிலேயே அதிநவீன ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடக்கத்திற்கு முன் ஹரியானாவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. ஜிந்த்–லலித் கேரா இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றதுடன், லக்னோவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ.) சிறப்புக் குழுவின் மேற்பார்வையில் ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் 10 பெட்டிகளுடன் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ரயிலில் அதிகபட்சம் 2,600 பேர் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகளுடன் அமைக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டீசலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்துவதால், கரியமில வாயு போன்ற நச்சுப் புகைக்கு மாற்றாக துாய்மையான நீராவி மட்டுமே வெளிவரும் என கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும்; வழக்கமான ரயில்களுடன் ஒப்பிடும்போது சத்தம் மற்றும் அதிர்வுகளும் குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடக்கத்துடன் ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.





