டெஹ்ரான்: ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு சொந்தமான பல போர் விமானங்கள் அழிந்ததாகவும், மேலும் சில விமானங்கள் சேதமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.
அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், தங்கள் நாட்டை நோக்கி வந்த மூன்று ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக ஜோர்டான் தெரிவித்திருந்தது.
ஈரான் வெளியிட்ட அறிக்கையில், ஜோர்டானில் நடந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், “ஆக்கிரமிப்பாளர்கள்” மற்றும் இஸ்லாம் விரோத அமெரிக்கர்களை ஜோர்டான் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிரியாவில் உள்ள அமெரிக்கப் படை தளங்கள்மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. ஈராக்கின் வட பகுதிகளிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியானாலும், அதை ஈரான் உறுதி செய்யவில்லை.





