கரூரில், இனாம் நில விவகாரத்தில் அறநிலையத் துறை உத்தரவுக்கு நன்றி தெரிவித்து காங்கிரசார் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் முதல்வர் விஜயை “கர்த்தரின் தேவதூதர்” என்றும், கரூர் எம்.பி. ஜோதிமணியை “மாரியம்மன்” என்றும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் மொத்தம் 3,084 ஏக்கர் இனாம் நிலங்களில் இருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டரில், “3,084 ஏக்கர் இனாம் நில பிரச்னையை தீர்த்து வைத்து நீண்டகால கனவை நனவாக்கிய முதல்வர் ஜோசப் விஜய்” என்றும், “உறுதுணையாக நின்ற எம்.பி. ஜோதிமணி” என்றும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்து கோவில்களின் நில விவகாரத்தில் இவ்வாறு மதச்சார்ந்த உவமைகளை பயன்படுத்தி போஸ்டர் ஒட்டியதால், ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும் உள்ளது என விமர்சனங்கள் எழுந்து, சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.