நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கும்கி யானை விஜய்க்கு, கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
55 வயதான விஜய், காட்டு யானைகளை துரத்துதல் மற்றும் பிடித்தல் போன்ற பணிகளில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட அனுபவமிக்க கும்கி யானை. கிராமப் பகுதிகளுக்கு அருகே முகாமிட்டிருந்த காட்டு யானைகளை துரத்துவதற்காக, கடந்த ஜூன் 4-ம் தேதி கும்கி கிருஷ்ணாவுடன் பந்தலூர் அருகேயுள்ள ரூபி எஸ்டேட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
சில நாட்கள் பணியில் ஈடுபட்ட நிலையில், விஜயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் சிகிச்சை அளித்து வந்தார்.
உடல்நிலையை முழுமையாக மதிப்பீடு செய்ய, வண்டலூர் வன உயிரின தடயவியல் மற்றும் நோயறிதல் ஆய்வகத்தின் நடமாடும் மருத்துவர் குழு நேரில் வந்து பரிசோதனை செய்து வருகிறது. சாணம், சிறுநீர், ரத்தம் ஆகிய மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்து, அதற்கேற்ப உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கூடலூர் வன அலுவலர் தேவராஜ், டாக்டர் ராஜேஷ்குமார், வண்டலூர் ஆய்வக டாக்டர் நேகாசிங் மற்றும் இளநிலை ஆய்வக பணியாளர் ஜானகிராமன் ஆகியோர் பராமரிப்பு பணியில் உள்ளனர். மருத்துவ குழுவினர் தெரிவிப்பதன்படி, விஜயின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது; தற்போது உணவு எடுத்துக் கொண்டு நன்றாக நடமாடி வருகிறது.





