சுகாதார சேவைகளைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சண்டிகரில் சுகாதாரம், கல்வி மற்றும் சாலை உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ₹4,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

பொது சுகாதாரத்தில் தூய்மையின் பங்கு முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் தூய்மை பாரதம் இயக்கம் மூலம் பெருமளவில் கழிப்பறைகள் கட்டப்பட்டதாகவும், பொது இடங்களில் தூய்மையை உறுதி செய்ய விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டதாகவும் கூறினார். தூய்மையை வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவ கட்டமைப்பு விரைவாக விரிவடைந்துள்ளதாக கூறிய மோடி, 2014 முதல் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் சொன்னார். இதன் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவ இடங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் சுகாதார அமைப்பை வலுப்படுத்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். காசநோய் இல்லாத இந்தியா இயக்கம் மூலம் உரிய நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுவதாகவும், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி கடந்த 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 21% குறைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், தற்போது உலகின் பல நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மக்கள் வருவதாகவும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா பிற நாடுகளிடம் உதவி கேட்காமல் உலக நாடுகளுக்கு உதவி செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.