சண்டிகர்: மேற்காசிய போரின்போதும் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், பல்வேறு சவால்களுக்கு இந்தியா திறம்பட பதில் அளித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஹரியானாவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய அவர், 20ஆம் நூற்றாண்டு டீசல் மற்றும் மின்சார ரயில்களின் காலமாக இருந்தது; 21ஆம் நூற்றாண்டில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவைகள் முன்னேறி வருவதாக கூறினார். ஹைட்ரஜன் ரயில்கள் நாட்டிற்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்றும், டீசல் சார்பு குறைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.
தற்போது ரயில்வே இயக்கத்தில் சுமார் 99% மின்சார பயன்பாட்டுக்கு மாறியுள்ளதாக மோடி குறிப்பிட்டார். ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் திறன் உலகில் சில நாடுகளுக்கே உள்ள நிலையில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும், இது ரயில்வே மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் நாட்டின் வளர்ந்து வரும் திறனை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது சமீபத்திய பயணத்தை நினைவூட்டிய பிரதமர், அங்கு பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசுகளுடன் விளையாட்டுத் துறை குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், விளையாட்டு மற்றும் வீரர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட துறைகளில் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவது ஹரியானா இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்றும் கூறினார்.





