சென்னை: டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ‘கடும் அதிர்ச்சி’ அளிப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என அரசு சுய விளம்பரம் செய்து வருவதாகவும், அதே நேரத்தில் அரசு நடத்தும் விற்பனை நிலையங்களில் மது வகைகளை அதிகரிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரிக்கும் பின்னணியில் போதைப் பழக்கம் முக்கிய காரணமாக இருப்பதாக கூறிய அவர், நல்ல அரசு மது உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும்; அணுகலை அதிகரிப்பது சரியல்ல என்றார்.
வெளியூர்களுக்கு சென்றால் மட்டுமே சில வகை மது கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, எல்லா வகைகளையும் கைக்கு எட்டும் தூரத்தில் கொண்டு வருவது இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை உயர்த்தும் என அவர் எச்சரித்தார். எனவே, அதிக அளவில் மது வகைகளை அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் உடனடியாக கைவிட வேண்டும்; முடிந்தவரை டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





