வாஷிங்டன்: 2020 அமெரிக்கத் தேர்தல் முடிவை பாதிக்கும் நோக்கில் 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவை சீனா திருடியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்கத் தேர்தல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்து பல ஆண்டுகளாக மக்களிடம் தவறான தகவல்கள் கூறப்பட்டதாகவும், தற்போதைய அமைப்பு ஹேக்கிங் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா உள்ளிட்ட அமெரிக்காவின் எதிரிகள் மட்டுமல்லாமல் அரசு சாரா குழுக்களும் தேர்தல் அமைப்பைச் சீர்குலைக்கும் திறன் கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார். ஜனநாயகத்திற்கு இணையவழி அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க நடவடிக்கைகள் தேவை என கூறிய டிரம்ப், ஒவ்வொரு அமெரிக்கரும் தங்களின் வாக்கு சரியாக பதிவு ஆகிறது என்ற உறுதியைப் பெற வேண்டும் என்றார். வாக்காளர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை ஆவணச் சான்றை கட்டாயமாக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும், மோசடி மற்றும் தலையீடுகள் இல்லாத வலுவான தேர்தல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்ததாக செய்தி தெரிவிக்கிறது.