தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர்

பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவராக ஆன்டி பர்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் விரைவில் பிரதமராக பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது.

ஸ்டார்மர் மீது அதிருப்தி, தேர்தல் பின்னடைவு

2024 ஜூலையில் நடந்த பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததையடுத்து கீர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் பொருளாதார மந்தநிலை, கடும் விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் ரீதியிலான சில தவறான முடிவுகள் காரணமாக மக்கள் அதிருப்தி அதிகரித்ததாக கூறப்படுகிறது; கடந்த மாத உள்ளாட்சி தேர்தலில் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது.

கட்சிக்குள் எதிர்ப்பு; ராஜினாமா அறிவிப்பு

இந்த பின்னடைவைத் தொடர்ந்து ஸ்டார்மருக்கு நெருக்கடிகள் அதிகரித்து, சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

நிர்வாகக் குழு கூட்டத்தில் தேர்வு

அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மான்செஸ்டர் நகர மேயரான ஆன்டி பர்னம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். தொழிலாளர் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 379 பேரின் ஆதரவைப் பெற்று அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஐந்து அம்ச திட்டம்; மன்னரை சந்திக்க உள்ளார்

தேர்வுக்குப் பிறகு பேசிய ஆன்டி பர்னம், நாட்டிலும் கட்சியிலும் மாற்றம் கொண்டு வரும் வகையில் ஐந்து அம்ச திட்டங்களை வெளியிட்டார். மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக அவர் விரைவில் மன்னர் சார்லசை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.