சென்னை: பார்லியில் விரைவில் விவாதத்திற்கு வரும் தொகுதி மறுவரையறை (டெலிமிடேஷன்) மசோதா மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்தார்.
பேட்டியில் அவர், தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறினார். 2025ஆம் ஆண்டில் 2,888 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 88 கொலைகளும் உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 44 கொலைகள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,352 ஜாதி மறுப்பு திருமணங்கள் நடந்தது வரவேற்கத்தக்கது என அவர் கூறினார். பெற்றோர் எதிர்ப்பால் ஜாதி மறுப்பு காதல் திருமணங்களில் ஆணவக் கொலைகள் அதிகரிக்கின்றன என கூறிய அவர், இதைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டமாக ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவற்றை மாநில அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வரை சந்தித்து பேசியதாகவும் கூறினார்.
வரும் கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை தாங்கள் உறுதியாக நிறைவேற்றுவோம் என அவர் கூறினார். திமுக ஆதரவு தரவில்லை என்றாலும் காங்கிரசுக்கு துணையாக திமுக இருக்காது; ஓட்டெடுப்பில் பங்கேற்பதை தவிர்க்கும் என நம்புவதாகவும், தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதால் திமுக அதை எதிர்க்காது என்றும் அவர் தெரிவித்தார்.





