அயோத்தி ராமர் கோவிலில் பெறப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அங்கு 10 நாள் சிறப்பு வழிபாடு நேற்று தொடங்கியது.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள பால ராமர் கோவிலை ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் இந்த விவகாரத்தை முன்வைத்த நிலையில், மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சர்ச்சை கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பல்வேறு ஹிந்து அமைப்புகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, கோவிலின் புனிதத்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுக்கும் வகையில் பிராயச்சித்தம் மற்றும் துாய்மைப்படுத்துதல் சடங்காக இந்த 10 நாள் வழிபாடு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நாட்களில் கோவில் குருகுல மாணவர்கள் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்தார். தினமும் 251 முறை விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படும்; அதேபோல் வால்மீகி ராமாயணமும் வாசிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, விசாரணையில் உள்ள எஸ்.ஐ.டி. இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்யலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையை முழுமைப்படுத்த மேலும் சில நாட்கள் அவகாசம் கோரவும் அந்த குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





