‘வந்தே மாதரம்’ தேசிய பாடலைத் தடுக்குதல் அல்லது அவமதித்தல் போன்ற செயல்களை குற்றமாக்கும் வகையில், புதிய திருத்த மசோதாவை வரவிருக்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்றதாக குறிப்பிடப்படுகிறது. 1950 ஜனவரி 24-ஆம் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபை இதை தேசிய பாடலாக ஏற்றுக்கொண்டது. முந்தைய காங்கிரஸ் அரசுகள் இந்த பாடலை ஓரங்கட்டியதாக பா.ஜ. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது; குறிப்பாக முழு பாடலையும் பாட வேண்டும் என அறிவுறுத்தியது. ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாட வேண்டுமா அல்லது இறுதியில் பாட வேண்டுமா என்ற குழப்பம் நீடித்ததால், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.
அந்த சுற்றறிக்கையில், அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்திலும் இறுதியிலும் ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாட வேண்டும் என்றும், முதலில் ‘வந்தே மாதரம்’ அதன் பின்னர் தேசிய கீதம் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ‘வந்தே மாதரம்’ பாடலை சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படும் தேசிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும் வகையில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இரு சபைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், பாடலைக் குலைக்க முயல்வது, அவமரியாதை செய்வது, பாட மறுப்பது, அல்லது முழுப் பாடலைப் பாடாமல் சில வரிகளை மட்டும் பாடி பகுதிகளை நீக்குவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும்; இதற்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பா.ஜ. தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா காங்கிரஸை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.





