சென்னை பட்டாளம் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வெளிநாட்டு மது பாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செயற்பொறியாளர் சரவணன் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் கூறியதன்படி, சரவணனின் ஓய்வு அறையில் ரூ.32,000 மதிப்புள்ள ஐந்து வகையான வெளிநாட்டு மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஒப்பந்ததாரர்கள் பரிசாக வழங்கியவை என அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சோதனையில், உதவி கமிஷனர் சொக்கலிங்கம் உட்பட 82 பேரிடமிருந்து மொத்தம் ரூ.41,790 பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மண்டல சுகாதார அலுவலர் மோகன சுந்தரத்திடமிருந்து ரூ.12,600 கைப்பற்றப்பட்டதாகவும், அந்த பணம் குறித்து கேட்டபோது சகோதரியின் மகளுக்கு நகை வாங்க எடுத்துவந்ததாக கூறிய அவர் வங்கியில் பணம் எடுத்ததற்கான ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

அண்ணா சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் மாதம் ரூ.25,000 மற்றும் ரூ.5,000 என சீட்டு தவணை செலுத்திய விவரம் குறித்து கேள்வி எழுப்பியபோது சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாகவும், அவரது வங்கி கணக்கில் ரூ.10.61 லட்சம் கணக்கில் வராத பணம் இருப்பதாகவும் எப்.ஐ.ஆர். குறிப்பிடுகிறது.

மேலும், சோதனையின்போது மண்டல அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் உதவி செயற்பொறியாளர் சரஸ்வதி வெளியே சென்றதாகவும், பின்னர் ரிப்பன் மாளிகையில் ஓட்டேரி கால்வாய் மேம்பாடு தொடர்பான கூட்டத்திற்கு சென்றதாக கூறியபோதும் அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் பதிவாகியுள்ளது. அவரது கைப்பையில் ரூ.3,200 இருந்ததாகவும், வங்கி இருப்பில் ரூ.1.71 லட்சம் கணக்கில் வராத பணம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.