கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். இதில், பெரும்பாலும் ஆன்லைன் வழியாக லஞ்சத் தொகை பரிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.

ஏ.டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையிலான குழு மாலை 4.30 மணியளவில் சோதனையை தொடங்கி, அலுவலக அறைகளுடன் சேர்த்து பார்க்கிங்கில் இருந்த அலுவலர்களின் வாகனங்களையும் சோதனை செய்தது. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முழுமையான சோதனைக்குப் பிறகு, பெண் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை 7.30 மணியளவில் வெளியே அனுப்பப்பட்டனர். அதிகாரிகள் தகவலின்படி, சோதனை இரவு 10 மணியை கடந்தும் தொடர்ந்தது.

அலுவலக ஊழியர்களின் ஆன்லைன் செயலிகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டதில், துணை தாசில்தார், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., இன்ஜினியர் மற்றும் உதவியாளர் உள்ளிட்டோருடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளில் ரூ.7.5 லட்சம் லஞ்சத் தொகை பரிமாற்றம் நடந்தது தெரிய வந்ததாக DVAC தெரிவித்தது. மேலும், ரூ.5,000 ரொக்கமும் சிக்கியதாக கூறப்பட்டது.