ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்திற்கு வியாபாரிகள் வாடகைக்கு வராததால், ரூ.19.50 கோடி செலவில் உருவாக்கப்பட்ட திட்டம் பயன்பாடின்றி முடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பழைய நகராட்சி அலுவலகத்தை இடித்து, மூலதன மானிய நிதியில் ரூ.19.50 கோடி செலவில் இரு தள வணிக வளாகம் கட்டப்பட்டது. இது கடந்த மார்ச் 13-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக வாடகைக்கு கேட்கப்படாமல் உள்ளது.

சதுர அடிப்படையில் வாடகை ரூ.12,534 முதல் ரூ.61,335 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகைக்கு எடுப்பவர்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முன்பணம் செலுத்த வேண்டியிருப்பதால், இவ்வளவு செலவில் போதிய வருவாய் கிடைக்காது என வியாபாரிகள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், பத்தலப்பள்ளி பகுதிக்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட உள்ளதாகவும், சில மாதங்களில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் தற்போதைய பஸ் ஸ்டாண்ட் டவுன் பஸ் ஸ்டாண்டாக மாறும் என்பதால், வணிக வாய்ப்பு குறையலாம் என்ற அச்சமும் வாடகையாளர்களை தயங்கச் செய்கிறது.

புதிய வளாகத்தில் பார்க்கிங் வசதி இருப்பதால், ஒரு தளத்தை தியேட்டர் போன்று மாற்றினால் வருகை அதிகரித்து கடைகள் தொடங்க பலர் முன்வரலாம்; மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.