முதல்வர் விஜயின் முதல் இலக்கு ‘கிரீன் கவர்மெண்ட்’ அமைப்பதே என்றும், அதனை நோக்கி அரசு பயணித்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். மதுரை அவனியாபுரத்தில் சோளங்குருணி கோயில் திருவிழாவில் பங்கேற்றபோது அவர் இதை கூறினார்.
சோளங்குருணியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான போத்திராஜன் வள்ளியம்மன் கோயிலுக்கு செல்ல வழிப்பாதை இல்லாததால், 21 ஆண்டுகளாக கிராம மக்கள் திருவிழா நடத்த சிரமப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும் நினைவூட்டினார்.
தற்போது கோயிலுக்கு செல்லும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், இன்று திருவிழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் கூறினார்.
மேலும், இது மக்களுடைய அரசு என்றும், மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர் விஜய் மக்களுக்கு தேவையானவற்றை அரசு மூலம் செய்து தருவார் என்றும் அவர் தெரிவித்தார். மக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ளாது என்றும் கூறினார்.
த.வெ.க. தலைவராக விஜய், மக்கள் தான் எஜமானர்கள்; லஞ்சம் உள்ளிட்ட தவறுகள் செய்யக்கூடாது; மக்களுக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியதாகவும், முதல்வராக ஆன பிறகும் ஒவ்வொரு கூட்டத்திலும் இதையே தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.





