இளம் தொழில்முனைவோர் தயக்கத்தை விட்டு முன்னேறி தொழில் தொடங்க வேண்டும்; அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில், “எல்லைகளைத் தாண்டிய தொழில்முனைவு” என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய நிதித் தொழில்முனைவோர் உச்சிமாநாட்டில் அவர் உரையாற்றினார்.
தற்போதைய தலைமுறையினர் தயக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றும், இன்று பல விஷயங்கள் எளிதாகி விட்ட நிலையில் “எதைப் பார்த்து தயக்கம்” என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். இந்தியா தொழில் செய்வதற்கான நாடு என்றும், அரசு எளிமையாக அணுகக்கூடியதாகவும் தொழில்களை வளர்க்கும் அமைப்பாகவும் மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் ஆதரவு வழங்கப்படுவதாகவும், இந்தியாவில் தொழில் தொடங்க தேவையான தளங்களும் வாய்ப்புகளும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இளம் தொழில்முனைவோர் தயக்கமின்றி தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றும், AI-யை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.





