புதுடில்லி: நிடி ஆயோக் வெளியிட்ட ‘தொழிலுக்கு உகந்த மாநிலங்கள்’ தரவரிசைப் பட்டியலில் குஜராத் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது.

நீண்டகால முதலீடுகளை ஈர்க்கும் திறனை மதிப்பிடும் வகையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு திறன், திறமையான மனிதவள அளவு, அமைப்பு திறன், நிதி ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மீள்தன்மை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளிட்ட அளவுகோல்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

56.6 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு, வணிக சூழல், நிதி ஆரோக்கியம் போன்ற காரணிகள் முக்கிய பலமாக குறிப்பிடப்பட்டுள்ளன. துறைமுக உள்கட்டமைப்பு, மின் விநியோகம் மற்றும் வலுவான தொழில்துறை அமைப்பு ஆகியவை மாநிலத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

53.7 புள்ளிகளுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது; நிதிச் சந்தை, தனியார் பங்களிப்பு மற்றும் புதுமை சார்ந்த உள்கட்டமைப்புகள் இதற்கு துணைநின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 53.3 புள்ளிகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது; உற்பத்தித் தளம், ஏற்றுமதி செயல்திறன், துறைமுக வசதிகள் மற்றும் முதலீடுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல் ஆகியவை தமிழகத்தின் வலுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், ஒடிசா 5வது இடமும், மத்தியப் பிரதேசம் 7வது இடமும் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசம் 19வது இடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மற்றும் பீஹார் மாநிலங்கள் முறையே 25 மற்றும் 26வது இடங்களில் உள்ளன. மலை மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பிரிவில் உத்தரகாண்ட் முதலிடத்தில் இருந்து, அசாம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களில் கோவா முன்னணியில் இருந்து, டில்லி மற்றும் சண்டிகர் அடுத்த இடங்களில் உள்ளன.