சென்னை: தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கினால், அரசு பஸ்களின் கட்டணத்துக்கு இணையாக 500 ஆம்னி பஸ்களை இயக்கத் தயாராக உள்ளோம் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் நிறுவன தலைவர் பாண்டியன் மற்றும் தலைவர் இளங்கோவன், மாநிலத்தில் பயணியர் தேவை அதிகரித்துள்ளதால் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக கூறினர்.
ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு குறித்த குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நீடிப்பதாகவும், அதற்கு தீர்வு காணும் நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவில் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசு கோரிக்கையை ஏற்றால், ஆண்டு முழுவதும் 500 பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்கத் தயாராக இருப்பதாக சங்கம் கூறியது. மேலும், ஆம்னி பஸ்களுக்கு பிரத்யேகமாக புதிய ‘பர்மிட்’ வழங்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.





