புதுடில்லி: பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழு, தன் வரைவு அறிக்கையை ஏற்கும் நடவடிக்கையை ஒத்திவைத்துள்ளது. பரிந்துரைகள் குறித்து உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
மத்திய அரசு 2025 ஆகஸ்டில் லோக்சபாவில் தாக்கல் செய்த 130வது அரசியல் சாசன திருத்த மசோதாவில், குற்ற வழக்கில் 30 நாட்கள் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டால், 31வது நாளில் பிரதமர்/முதல்வர்/அமைச்சர் பதவி தானாகவே பறிபோகும் வகையில் விதிமுறை கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.க. லோக்சபா எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையிலான குழு, ஐந்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதில், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்களை நிரந்தரமாக பதவி நீக்காமல், சட்ட நடைமுறைகள் முடியும் வரை தற்காலிகமாக பதவி நீக்கலாம் என்பதும், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களையே “தீவிர குற்றங்கள்” என வரையறுக்க வேண்டும் என்பதும் இடம்பெற்றுள்ளன.
நேற்று நடந்த கூட்டத்தில் பரிந்துரைகள் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டு பரிந்துரைகளில் ஓட்டெடுப்பு முடிந்த நிலையில், மீதமுள்ள பரிந்துரைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் சில பரிந்துரைகளுக்கு ஆளுங்கட்சி எம்.பி.க்களே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆலோசனை தேவை என முடிவு செய்யப்பட்டதால், வரைவு அறிக்கையை ஏற்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக, நாளை மறுதினம் தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.





