இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்குப் பிறகு சீனியர் துவக்க வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் கடந்த 8 ஒருநாள் போட்டிகளில் 241 ரன்கள் (சராசரி 30.1, ஸ்டிரைக் ரேட் 88.6) என்ற கணக்கே உள்ளது.

இந்த முடிவு குறித்து இந்திய அணி நிர்வாகம் ரோகித்துடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. ரோகித் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த தகவல் உண்மையானால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடும் அவரது கனவு முடிவுக்கு வரும்.

ஆனால் ரோகித் சர்மா அல்லது பி.சி.சி.ஐ. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 2007ல் பெல்பாஸ்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்ற ரோகித், 287 ஒருநாள் போட்டிகளில் 33 சதம், 62 அரைசதம் உட்பட 11,757 ரன்கள் குவித்துள்ளார்.

56 ஒருநாள் போட்டிகளில் (42 வெற்றி, 12 தோல்வி, ஒரு டை, ஒரு முடிவு இல்லை) கேப்டனாக செயல்பட்ட அவர், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். அவரது தலைமையில் இந்திய அணி 2024 டி-20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது.

மேலும், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிரை விட தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் இந்த முடிவில் முக்கிய பங்கு வகித்ததாகவும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இது எடுக்கப்பட்டதாகவும் தகவல் கூறுகிறது. ரோகித் ஓய்வு பெற்றால் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.