புதுடில்லி: கல்வியாளரும் பருவநிலை ஆர்வலருமான சோனம் வாங்சுக், டாக்டர்கள் உடல்நிலை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக எச்சரித்தாலும், போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற அமைப்பு டில்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த போராட்டத்தில் வாங்சுக் ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவருடன் மூன்று மாணவர்களும் உண்ணாவிரதத்தில் உள்ளனர். போராட்டம் இன்றுடன் 20வது நாளை எட்டியுள்ளது.

ஆதரவாளர்களிடம் பேசிய வாங்சுக், உடல் பலவீனமடைந்தாலும் உறுதி தளரவில்லை என்று கூறினார். மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் ஜூலை 20 அன்று பார்லிமென்டை நோக்கி அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘எந்த விலைகொடுத்தாவது ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்’ என்று அவர் கூறியதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.