வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர் நீக்கப்படுவது மட்டும் அவரின் குடியுரிமை பறிபோனதாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டும் தானாகவே இணைந்தவை அல்ல என நீதிமன்றம் குறிப்பிட்டது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மூன்றாம் கட்டமாக நடைபெறும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கின் விசாரணையில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது. SIR நடவடிக்கையில் “சந்தேக வாக்காளர்கள்” எனக் கூறி பெயர்கள் நீக்கப்படுவதால் அரசு சமூகநலத் திட்டப் பலன்கள் மறுக்கப்படுகின்றன என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
குடியுரிமை குறித்து சந்தேகம் எழும் சூழலில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்க முடியாது என்றும் வலியுறுத்தியது.
மேலும், பீஹார் மற்றும் மேற்கு வங்கம் தொடர்பான SIR வழக்குகளிலும் குடியுரிமை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பதை நீதிமன்றம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டது.





