தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதை கூறினார்.

கடந்த 16 நாட்களாக முதல்வர் விஜய் பல துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருவதாக மரிய வில்சன் கூறினார். தினமும் சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை அவர் இந்த ஆலோசனைகளுக்கு நேரம் ஒதுக்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அமைச்சரவை கூட்டம் சீராக நடந்து முடிந்ததாக அவர் கூறினார். தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 55 நாட்களாக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அனைத்து துறைகளிலும் அரசு கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.