தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக, பொதுமக்கள் தங்களின் சுய விவரங்களை இணையவழியாக பதிவு செய்யும் ‘டிஜிட்டல்’ சுய கணக்கெடுப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் பதிவு ஜூலை 31 வரை செய்யலாம்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரும் முதல்வர் விஜயும் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, பொதுமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். கவர்னர், இதை ஒரு தேசிய பொறுப்பாகக் கருதி ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்கால திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்த இந்த கணக்கெடுப்பு உதவும் என்றும், ஒவ்வொரு குடும்பமும் முழுமையான, துல்லியமான தகவல்களை வழங்கி கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பதிவு செய்த பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் விஜய், மக்கள்தொகை கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கை அல்ல; மக்கள் வழங்கும் தகவல்களே அனைத்து திட்டங்களுக்குமான அடிப்படை என குறிப்பிட்டார். தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அறிவிப்பின்படி, சுய கணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தாத குடும்பங்கள் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும் நேரடி வீட்டு கணக்கெடுப்பில் விவரங்களை அளிக்கலாம். நாடு முழுவதும் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ல் தொடங்க உள்ளது.