சென்னை: நடப்பாண்டு ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் அதிகரித்துள்ளதால் மருத்துவ சேர்க்கைக்கான ‘கட்-ஆப்’ உயரக்கூடும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நாடு முழுவதும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்ற நிலையில், வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து அது ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது.
மறு தேர்வை 19,99,895 பேர் எழுதியதில் 11,21,185 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 4,67,134 பேர், மாணவியர் 6,54,049 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இருவர் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய தரவரிசையில் பஞ்சாபைச் சேர்ந்த ஆர்யன் குப்தா முதலிடம் பிடித்தார். முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீனிகா தேசிய அளவில் 7-வது இடம் பெற்றுள்ளார்.
மாநில அளவில் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு-மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரனின் மகன் வெங்கடபதி வேலாயுதம் 720-க்கு 705 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, 690-க்கு மேல் மதிப்பெண் பெற்றோர் இந்த ஆண்டு 85 பேர் இருப்பதாகவும், கடந்த முறை அத்தகையோர் இல்லையெனவும் கூறி, கட்-ஆப் 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரலாம் என்றார். கல்வி ஆலோசகர் அஸ்வின், தமிழகத்தின் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொதுப்பிரிவினருக்கான கட்-ஆப் கடந்த ஆண்டு 533 இருந்த நிலையில், இந்த ஆண்டு 576 வரை உயர்ந்து 43 மதிப்பெண்கள் அதிகரிக்கலாம் என மதிப்பிட்டார்.




