சென்னை: தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கருத்துக் கேட்பில் பங்கேற்றவர்கள் வழங்கிய மனுக்களை முழுமையாக வாசித்து, அதிலுள்ள முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜூலை 14 முதல் மூன்று நாட்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாக தெரிவித்தார். தொழில் துறையினர், சிறு-குறு-நடுத்தர தொழில்கள் துறையினர், வணிகர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன.

கருத்துக் கேட்பின் போது, அமைச்சர்கள் மரியவில்சன், அருண்ராஜ், லோகேஷ் தமிழ்செல்வன், பர்வேஸ் மற்றும் நிதித்துறை செயலர் சித்திக் ஆகியோரிடம் நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்ததுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் வழங்கினர்.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன் அடிப்படையில், கருத்துக் கேட்பில் மொத்தம் 80 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன; அவற்றை நிதித்துறை உயரதிகாரிகள் வாசித்து, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்களை அழைத்து ஆலோசித்து வருகின்றனர்.

இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் பட்ஜெட் அறிவிப்புகள் தயாரிக்கப்படும். அதிக நிதி தேவையில்லாத திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.