காங்கிரஸ் கட்சியின் பேனர் மற்றும் விளம்பரங்களில் கோஷ்டி தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி விழாக்கள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான மேடை பேனர்கள் மற்றும் விளம்பரப் பொருட்களில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சேலத்தில் சமீபத்தில் நடந்த ‘நீட்’ எதிர்ப்பு கருத்தரங்கில் மேடையில் வைக்கப்பட்ட பேனரில் ராகுல் காந்தியின் படம் மட்டுமே இருந்ததாகவும், பேசுபவர்களுக்கு மட்டுமே மேடையில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்டனர். அந்த நிகழ்வில் மயூரா ஜெயகுமார், விஜய் வசந்த் உள்ளிட்டோருடன் மாணிக்கம் தாகூரும் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கான பேனரிலும் கார்கே, ராகுல் காந்தி படங்கள் மட்டுமே இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சிக்குள் கோஷ்டி பூசலை குறைக்க முடியும் என மாணிக்கம் தாகூர் கருதுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், மாவட்ட நிர்வாகிகள் உண்மையில் கட்சி பணியில் ஈடுபடுகிறார்களா என்பதை அறியும் நோக்கில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய இடங்களுக்கு அவர் சென்று வந்ததாகவும், காமராஜர் அமைச்சரவையில் இருந்த முன்னாள் அமைச்சர்களின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.




