‘பகவான் கிருஷ்ணர் ஒரு முஸ்லிம்; அவர் தினமும் ஐந்து வேளை தொழுகை செய்தார்’ என இஸ்லாமிய மதகுரு மவுலானா ஜர்ஜிஸ் அன்சாரி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டில் நடந்த மதக் கூட்டத்தில் பேசிய அவர், பகவத் கீதையின் 6ஆம் அத்தியாயம் 10ஆம் ஸ்லோகம் இதை உறுதிப்படுத்துகிறது என்றும், ஹிந்து மத நூல்கள் இஸ்லாமிய போதனைகளை பிரதிபலிக்கின்றன என்றும் கூறினார். இதற்கு ஹிந்து அறிஞர்கள் மற்றும் விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பகவத் கீதையில் அத்தகைய கருத்துகள் இல்லை என சுட்டிக்காட்டினர்.
இந்த பேச்சு ஹிந்து அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹிந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு புண்படுத்தியதாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து உத்தர பிரதேசத்தின் லக்னோ போலீசார் மவுலானா மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, மஹா மண்டலேஷ்வர் விஷ்ணு தாஸ் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அயோத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமஸ்கிருதம் குறித்த அடிப்படை அறிவில்லாமல் தவறாகப் புரிந்து கொண்டு மதகுரு பேசியதாக குற்றம்சாட்டினார்.
மேலும், மவுலானாவின் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அவர் அறிவித்தது, விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.





