குழந்தை திருமணத்தைத் தடுத்து, பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண் கல்வி முக்கியம் என்றும் அவர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூரில் நடைபெற்ற 26வது கோடை விழாவில் அவர் பேசினார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தை திருமணம் காரணமாக சிறுமிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறிய அமைச்சர், அந்த நடைமுறையைத் தடுத்து கல்வி தொடர அரசு ஆதரவு வழங்கப்படும் என வலியுறுத்தினார்.
மேலும், ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மலைவாழ் மக்களுக்கு கூடுதல் பள்ளி மற்றும் மருத்துவமனை அமைக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




