ஜம்மு-காஷ்மீரில் திடீரென பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பூஞ்ச் மாவட்டத்தின் நூனாபந்தி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 28 வயதான நசியா உயிரிழந்தார். அவரது கணவர் முகமது ஹபீஸ் மற்றும் மூன்று குழந்தைகள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மர்ஹோட்டே பகுதியில் உள்ள ஓடையில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், வெள்ளத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில், ரஜோரியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூலை 23 வரை கனமழை தொடரும் என்றும், அடுத்த சில நாட்களில் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பரவலான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், வானிலை அபாயத்தை கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.