தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் முறையில் மாற்றம் தேவை என வலியுறுத்தி, அரசியல்வாதிகள் ‘இல்லை’ சொல்லத் துணிய வேண்டும்; நிர்வாக அதிகாரிகள் ‘ஆம், முடியும்’ என்று செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
கோவையில் சங்கல்ப் ஐஏஎஸ் அகாடமி திறப்பு விழாவில் பேசிய அவர், அதிகார மையத்தில் இருப்போர் அந்த மண்ணின் புவியியல் மட்டுமல்லாமல் வரலாறும் கலாசாரமும் அறிந்து பணியாற்ற வேண்டும் என்றார். சிவில் சர்வீசில் இருப்போர் மற்றவர்களைப் போல அல்லாமல் வேறுபட்ட சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தான் அரசியல்வாதியாக இருந்த அனுபவத்தை நினைவுபடுத்திய அர்லேக்கர், பொதுவாக அரசியல்வாதிகள் மக்கள் கேட்பதற்கு ‘இல்லை’ என்று சொல்லத் தயங்குவார்கள்; அதேபோல் அதிகாரிகள் ‘ஆம், முடியும்’ என்று எளிதில் சொல்ல மாட்டார்கள் என்றார். இந்த அணுகுமுறை மாறி, அரசியல்வாதிகள் வரம்புகளை நிர்ணயிக்கவும், அதிகாரிகள் தீர்வுகளை சாத்தியப்படுத்தவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், காலனித்துவ சிந்தனையிலிருந்து வெளியேறி மக்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்ற வேண்டும் என்றும், மக்களுக்கு சேவை செய்வதே சிவில் சர்வீஸ் பணியின் மையம்; தேசபக்தியுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
பீஹார் மாநிலத்தை எடுத்துக்காட்டிய அவர், அங்கிருந்து பலர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதாகவும், வகுப்பறை கல்வியுடன் நிற்காமல் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் தேர்வில் வெற்றி பெற்ற பிறகும் ஒட்டுமொத்த அமைப்பில் தோல்வியடையக் கூடாது; சிவில் சர்வீஸ் மூலம் சமூக மாற்றத்திற்கு வித்திட்டு நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.





