புதுடில்லி: பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கும் என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அதனை முன்னிட்டு இன்று மத்திய அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பார்லிமென்ட் அனைவருக்கும் பொதுவானது என்றும், அரசு கொண்டு வரும் மசோதாக்கள் குறித்த விவாதங்களில் ஆளும் தரப்பும் எதிர்க்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக பங்கேற்பார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

பார்லிமென்ட் சிறப்பாக செயல்படும்போது நாடு அதிகம் பயனடையும் என்றும், அவை நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெற மீண்டும் ஒருமுறை கட்சித் தலைவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்போம்; அதேபோல் அவர்களும் அரசின் கருத்துகளை கேட்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.