‘ஜன்தன்’ திட்டத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் உலா வரும் போலி இணையதள லிங்குகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்தி, நிதி உதவி திட்டம் போல காட்டும் விளம்பரங்கள் வேகமாக பரவி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில் இத்தகைய மோசடிகளில் சிக்க வாய்ப்பு அதிகம் என்பதால், மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘இப்போதே விண்ணப்பியுங்கள்’, ‘ஸ்கிராட்ச் கார்டை தேயுங்கள்’ போன்ற ஆசை வார்த்தைகள் மூலம் போலி லிங்குகளை கிளிக் செய்ய வைப்பதே மோசடி கும்பல்களின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழியில் பெயர், செல்போன் எண், வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி போன்ற ரகசிய தகவல்களை திருட முயற்சி நடக்கிறது என போலீசார் எச்சரித்துள்ளனர். எனவே, வாட்ஸ் ஆப்பில் வரும் சந்தேகமான லிங்குகளை திறக்கவோ, பகிரவோ கூடாது என்றும், அரசு நலத்திட்ட தகவல்களை .gov.in அல்லது .nic.in என முடியும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், வங்கி விவரங்கள், ஆதார் எண், ஓடிபி போன்ற தகவல்களை அறியாத நபர்களிடமோ அல்லது சந்தேகத்திற்கிடமான இணையதளங்களிலோ பதிவிடக் கூடாது என்றும், இலவச பணம் அல்லது கேஷ்பேக் சலுகை என்ற பெயரில் நடைபெறும் ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.





