பசுமை ரயில் போக்குவரத்தை நோக்கிய முக்கிய முன்னேற்றமாக, இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் இயக்க ரயில் சேவையை தொடங்கியுள்ளது. ஹரியானாவின் ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலகின் பல நாடுகளில் தற்போது இயக்கப்படும் ஹைட்ரஜன் பயணியர் ரயில்கள் பெரும்பாலும் 2 அல்லது 3 பெட்டிகளுடன் குறுகிய தூர வழித்தடங்களில் மட்டுமே இயங்கும் நிலையில், இந்திய ரயில்வே 10 பெட்டிகள் கொண்ட ரயிலை இயக்கி புதிய அளவுகோலை உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சுமார் 2,600 பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் அதிக அழுத்த ஹைட்ரஜன் பாதுகாப்பாக சேமிக்கப்படும் வகையில் தனிப்பட்ட பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் காற்றுடன் வேதிவினை புரிந்து மின்சாரம் உருவாக்குவதன் மூலம் ரயில் இயங்குகிறது; டீசல் இன்ஜின்களைப் போல கார்பன் அல்லது கரும்புகை வெளியிடாமல், நீராவி மட்டுமே துணைப் பொருளாக உருவாகும் என கூறப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்களாக, அசாதாரண செயல்பாடு கண்டறியப்பட்டால் தானாகவே செயல்பாட்டை நிறுத்தி ஹைட்ரஜன் விநியோகத்தை துண்டிக்கும் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது அறை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவசர நேரங்களில் ரயிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜிந்த் நகரில் ஒரே நேரத்தில் 3,000 கிலோ வரை ஹைட்ரஜன் சேமிக்கக்கூடிய பெரிய எரிபொருள் நிரப்பும் நிலையமும் நிறுவப்பட்டுள்ளது. ஜிந்த்–சோனிபட் சேவை அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, கல்கா–சிம்லா உள்ளிட்ட பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. பயண தூரத்தைப் பொறுத்து கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.