வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது மாணவி ரித்தி சவுகான், அமெரிக்க கடற்படையின் இளைஞர் பிரிவில் முக்கிய தலைமைப் பொறுப்பை ஏற்று கவனம் பெற்றுள்ளார்.
சிறு வயதிலிருந்தே ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஆர்வம் கொண்டிருந்த ரித்தி, அமெரிக்க கடற்படையின் இளைஞர் அமைப்பான ‘சீ கேடட்’ திட்டத்தில் இணைந்தார். அவரது கடின உழைப்பு, தலைமைத் திறன் மற்றும் செயல்திறனை கவனித்த நிர்வாகம், தற்போது அவருக்கு உயர்ந்த பொறுப்பை வழங்கியுள்ளது.
ரித்திக்கு ‘ரெஜிமென்டல் கமாண்டர்’ என்ற பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறுப்பின் கீழ் சுமார் 300 பேரை வழிநடத்துதல், பயிற்சிகளை மேற்பார்வை செய்தல், ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கண்காணித்தல் மற்றும் அணிவகுப்புகளை தலைமை தாங்கி நடத்துதல் போன்ற பணிகள் இடம்பெறுகின்றன.
இந்த நியமனம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தியர்களும் அமெரிக்க வாழ் இந்தியர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய ரித்தி, இந்தப் பொறுப்பு மிகப் பெரிய கவுரவம் என்றும், கடின உழைப்பும் இலக்கை நோக்கிய பயணமும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.





